மருத்துவ படிப்புக்கான இடங்கள் எத்தனை?

மருத்துவ படிப்புக்கான இடங்கள் எத்தனை? மாறுபட்ட புள்ளி விவரங்களால் மாணவர்கள் குழப்பம் மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் பங்கு பெற்று தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அரசு கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 ஆயிரத்து 574-ம், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 819-ம் என மொத்தம் 3 ஆயிரத்து 393 இடங்கள் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல், அரசு தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட தகவலில், அரசு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 ஆயிரத்து 447-ம், ராஜா முத்தையா கல்லூரியில் 127-ம், சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் 65-ம், சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 689-ம் என மொத்தம் 3 ஆயிரத்து 328 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பு, கடந்த 19-ந்தேதி அதிகாரிகள், அரசு கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 ஆயிரத்து 572-ம், சுயநிதி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783-ம் என மொத்தம் 3 ஆயிரத்து 355 இடங்கள் இருப்பதாக தெரிவித்தனர். இப்படியாக மருத்துவபடிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை எத்தனை? என்பது குறித்த மாறுபட்ட புள்ளிவிவரங்களால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இதில் எது சரி? என்பதை சுகாதாரத்துறை விளக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments