என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கப்படுகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் 509 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்தனர். ரேண்டம் எண் வெளியீடு விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் ரேண்டம் எண் வெளியீடு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு ரேண்டம் எண்ணை வெளியிட்டு பேசியதாவது:- ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் எடுத்திருந்தால் ரேண்டம் எண் பயன்படுத்தப்படும். கடந்த வருடம் 27 மாணவ- மாணவிகளுக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. விளக்கம் என்ஜினீரியரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ- மாணவிகளுக்கு அவர்களின் கட் ஆப் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வில் இடம் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கட் ஆப் மதிப்பெண் ஒரே மாதிரி இருந்தால் மாணவர்கள் கணிதத்தில் எடுத்த மதிப்பெண்களை முதலில் பார்ப்பார்கள். கணிதத்தில் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், 2-வதாக இயற்பியல் பாடத்தில் எடுத்த மதிப்பெண் கணக்கிடப்படும். அதிலும் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், 4-வதாக விருப்ப பாடத்தில் உள்ள மதிப்பெண் கணக்கிடப்படும். அப்போதும் மதிப்பெண் ஒன்று போல இருந்தால் சீனியரிட்டி கணக்கிடப்படும். ஒரேநாளில் மாணவர்கள் பிறந்தவர்களாக இருந்தால் ரேண்டம் எண் கணக்கிடப்படும். ரேண்டம் எண்ணில் அதிகமதிப்பு உடையவர்களை கலந்தாய்வுக்கு முதலில் அழைப்பார்கள். மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் மாணவர்கள் 1 லட்சத்து 214 பேர். மாணவிகள் 59 ஆயிரத்து 416 பேர். திருநங்கை 1. முதல் தலை முறை பட்டதாரிகளாக வர இருப்பவர்கள் 82 ஆயிரத்து 727 பேர்கள். மாற்றுத்திறனாளிகள் 320 பேர்கள். தொழில்கல்வி மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 249 பேர். விளையாட்டு பிரிவினர் 7 ஆயிரத்து 4 பேர். முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதார்கள் 2 ஆயிரத்து 171 பேர். சான்றிதழ் சரிபார்த்தல் சான்றிதழ் சரிபார்த்தல் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும். சான்றிதழ் சரிபார்த்தல் 42 உதவி மையங்களில் நடைபெறும். சான்றிதழ் சரிபார்க்கும் மையம், தேதி மற்றும் நேரம் ஆகியவை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். கலந்தாய்வு உத்தேசமாக ஜூலை 7-ந்தேதி தொடங்கப்படும். ஆனால் மருத்துவ கலந்தாய்வு நடந்த பின்னர் தான் இந்த கலந்தாய்வு தொடங்கும். சென்னையில் மட்டும் 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். இவ்வாறு கே.பி.அன்பழகன் கூறினார். துணைவேந்தர் ரேண்டம் எண் வெளியீடு நிகழ்ச்சியில் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.கே.சுரப்பா, அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன், உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் கே.விவேகானந்தன், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன், மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments