விடுதிகளில் தங்கிப் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் அமைச்சர் எஸ்.வளர்மதி அறிவிப்பு

அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தனித் திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ். வளர்மதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசியபோது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: தலா 100 மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் ரூ. 2 கோடியே 10 லட்சத்தில் 5 கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். விடுதிகளில் தங்கியுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 51 லட்சத்து 37 ஆயிரம் செலவில் தனித் திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் 22,852 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ரூ. 39 லட்சத்து 20 ஆயிரத்தில் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு ‘கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம்’ தொடங்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 32 லட்சம் ஒதுக்கப்படும். ஜெருசலம் புனிதப் பயணம் செல்ல ஆண்டுதோறும் 500 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ. 20,000 வீதம் ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை இனி 600 ஆக அதிகரிக்கப்படும். தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 50 லட்சமாக உயர்த்தப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பொருட்டு ரூ. 25,000 வீதம் 231 கல்லூரி விடுதிகளுக்கு ரூ. 57 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ. 650-லிருந்து ரூ. 900 ஆக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் எஸ்.வளர்மதி தெரிவித்தார்.

Comments