ஜூலை 15 வரை ஆன்லைனில் பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பி.ஆர்க். படிப்புக்கு ஜூலை 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்க உள்ளது.
பொறியியல் படிப்புக்கு நிகரான பி.ஆர்க். படிப்பில் ஏறத்தாழ 3,000 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த கலந்தாய்வையும் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும். பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான தேசிய கட்டிடக்கலை கவுன்சில் (நாட்டா) திறனறித்தேர்வு ஏற்கெனவே நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. இந்த நிலையில், பி.ஆர்க். படிப்புக்கு ஜூலை 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.ஆர்க். படிப்பில் சேருவதற்கு பின்வரும் இணையதளங்களைப் பயன்படுத்தி ஜூலை 4 முதல் 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnea.ac.in/barch2018 www.annauniv.edu/barch2018 தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் மாணவர்கள் பி.ஆர்க். படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) மூலமாகவும் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த விரும்புவோர் கட்டணத்தை “The Secretary, Tamil Nadu Engineering Admissions, Anna University” என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக டிடி எடுத்து அதை மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு தங்களுக்கு வசதியாக ஏதேனும் ஒரு மையத்தை தேர்வுசெய்துகொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, ஆன்லைன் விண்ணப்பத்தின் பிரின்ட் அவுட், அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை குறிப்பிட்ட நாளில் கொண்டுவர வேண்டும். விளையாட்டு வீரர் பிரிவின்கீழ் விண்ணப்பிப்பவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வர வேண்டும். சிறப்பு பிரிவினர் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கலந்தாய்வு சென்னையில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments