மாணவர் உதவித்தொகை அக். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவ, மாணவியர்கள் உதவித்தொகை பெறுவதற்கு வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மேற்கண்ட மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணையும் குறிப்பிட வேண்டும். வரும் செப்டம்பர் 1-ம் தேதியில் தொடங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 15-ம் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை வரும் நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்களின் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept -யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் உள் ளன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments