மருத்துவ படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு 16-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது சென்னை, ஜூலை.8- மருத்துவ படிப்பு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு 16-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. கலந்தாய்வு மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 1-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், 1,068 அரசு ஒதுக் கீட்டு பி.டி.எஸ். இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடந்தது. இவற்றில் 3 ஆயிரத்து 882 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்ப 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அகில இந்திய மருத்துவ படிப்பு கலந்தாய்வு 23-ந் தேதி நிறைவடைய இருக்கிறது. அதன்பிறகு 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். சுயநிதி கல்லூரிகளில் 723 எம்.பி.பி.எஸ்., 645 பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு 16-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. சி.எம்.சி. கல்லூரி இந்த இடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு எந்தெந்த நாட்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த தகவல்கள் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வும் இந்த நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வுடன் சேர்த்து நடைபெற இருக்கிறது. 72.25 சதவீத மாநில பாடத்திட்ட மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வான 2 ஆயிரத்து 805 (72.25 சதவீதம்) மாணவர்கள் மாநில பாடத்திட்டத்திலும், 1,077 மாணவர்கள் (27.75 சதவீதம்) சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாடத்திட்டத்திலும் படித்தவர்கள் ஆவர். மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களில் 1 முதல் 1,000 வரையிலான தரவரிசையில் 4 மாணவர்களும், 1,001 முதல் 3 ஆயிரம் வரையிலான தரவரிசையில் 8 மாணவர்களும் இடம் பிடித்து இருந்தனர். இவர்களில் 3 ஆயிரம் இடங்களுக்குள் வந்திருந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்றும், 3001 முதல் 5 ஆயிரம் தரவரிசையில் உள்ள 16 மாணவர்களில் சிலருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதன்படி, மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 20 மாணவர்களுக்கு இடம் கிடைத்து இருக்கிறது. இதில் 7 பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் ஆவர்.

Comments