பள்ளிக்கல்வி துறை சார்பில் ரூ.160 கோடியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிக்கல்வி துறை சார்பில் ரூ.160 கோடியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.160 கோடியே 60 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்கள், ஆய்வகங்களை முதல்வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் நபார்டு கடன் திட்டத்தில் காஞ்சிபுரம் - மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகத்துடன் கூடிய 22 வகுப்பறைக் கட்டிடம், அரியலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, மதுரை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், திருவண்ணாமலை, நெல்லை, வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 44 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 306 வகுப்பறைகள், 44 ஆய்வக கட்டிடங்கள் ரூ.68 கோடியே 97 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின்கீழ் அரியலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.91 கோடியே 60 லட்சத்து 46 ஆயிரம் மதி்ப்பில் 59 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறாக ரூ.160 கோடியே 58 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். கருணை அடிப்படை நியமனம் பொதுத்துறையில் ஓட்டுநர்களாக பணியாற்றி பணிக்காலத்தில் இறந்த எம்.சுரேஷ்பாபு, எஸ்.ரவிச்சந்திரன், வி.சவுந்திரராஜன் ஆகியோர் வாரிசுதாரர்களுக்கு அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதல்வர் கே.பழனி சாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ், பொதுத்துறைச் செயலர் ப.செந்தில்குமார், துணைச் செயலர் த.மோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments