தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்: சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ்.இ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கடந்த 10-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், ‘மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட 49 கேள்விகள் தவறாக இருந்ததால் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும், மறு தரவரிசை பட்டியலை வெளியிடவும் சி.பி.எஸ்.இ.க்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு தடை கோரி சி.பி.எஸ்.இ. தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், 2018-ம் ஆண்டு நீட் தேர்வுக்கான தகவல் தொகுப்பு குறிப்பில் ‘மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு 2 மொழிகளில் வினா புத்தகம் வழங்கப்படும். ஒன்று மாநில மொழியிலும், மற்றொன்று ஆங்கிலத்திலும் இருக்கும். மாநில மொழியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு, கேள்வி மொழிபெயர்ப்பில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் ஆங்கிலத்தில் உள்ளதை பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் இறுதியானதாக கருதப்படும்’ என உள்ளது. எனவே, ஐகோர்ட்டின் தீர்ப்பு தவறான அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, டி.கே.ரங்கராஜன் சி.பி.எஸ்.இ. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அதனை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தமிழகத்தை சேர்ந்த மாணவர் சத்யாதேவர், தான் ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும் தனக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளதாகவும், ஐகோர்ட்டு உத்தரவால் தனக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதே கல்லூரியில் ஒதுக்கீடு நீடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் சி.பி.எஸ்.இ. தரப்பில் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments