25 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பட்டயக் கணக்காளர் பயிற்சி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கம்

25 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பட்டயக் கணக்காளர் பயிற்சி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கம் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள். பட்டயக் கணக்காளர் பணிக்கான தேவையைக் கருத்தில்கொண்டு 25 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்களுக்கு, 500 பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு வாரத்தில் ஒருநாள் இலவச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் மற்றும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் ஆகியவை இணைந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சி.ஏ.) பணிக்கான பயிற்சி அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சிகளின் தொடக்க விழா ஈரோடு மாவட்டம் கோபி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் திட்ட விளக்க உரையாற்றினார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்தாய்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: வாரத்துக்கு ஒரு நாள் பயிற்சி நாட்டில் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு பட்டயக் கணக்காளர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 படிக்கும்போதே, 25 ஆயிரம் மாணவர்களுக்கு, வாரத்துக்கு ஒரு நாள், 500 பட்டயக் கணக்காளர்களைக் கொண்டு இலவசமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முதலாக பட்டயக் கணக்காளர் பணிக்கான வகுப்புகள் இலவசமாக தமிழகத்தில்தான் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அந்தந்த பகுதி கல்லூரிகளில் சேர்ந்த பிறகு, பட்டயக் கணக்காளர் பணிக்கான அடிப்படைத் தேர்வை எழுதும் வகையில் 15 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பட்டயக் கணக்காளர் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் வாரம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். தமிழகத்தில் 3,019 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி அளித்தது. இதில், 1,412 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 25 ஆயிரம் பேருக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும். தமிழக அரசின் பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில் இருந்து 40 சதவீத கேள்விகள் நீட் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 பாடத்திட்டத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி சேர்க்கப்படுவதால், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. கணினிமயமாக்கம் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சீருடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினிமயமாக்கப்படும். 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஸ்மார்ட் கிளாஸ் வசதி செய்து தரப்படும் என்றார். 3.25 லட்சம் பேரே உள்ளனர் தென்னிந்திய பட்டயக் கணக்காளர் சங்கத்தின் மண்டல உறுப்பினர் ஜலபதி பேசும்போது, நாட்டில் 130 கோடி மக்கள் தொகை உள்ள நிலையில், 3.25 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் மட்டுமே உள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் தேர்வுக்கான பயிற்சியை அளிப்பது தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் தெரிவித்த ஐந்தாவது நாளே திட்டத்தை செயலாக்க ஒப்புக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இக்கல்வியைப் பயில செலவு செய்யும் மொத்த தொகையையும், ஒரு மாதம் பணி புரிந்தாலே ஈட்டி விட முடியும். தேவைக்கேற்ப பட்டயக் கணக்காளர்களை உருவாக்க அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்கள் மையம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார். விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஈரோடு பட்டய கணக்காளர் சங்கத்தின் தலைவர் டி.கிருஷ்ணசாமி, வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சுபாஸ்ரீனி, 'இந்து தமிழ்' நாளிதழின் பொதுமேலாளர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரா.பாலமுரளி, கல்லூரியின் தலைவர் கருப்பணன், கோபி கல்வி மாவட்ட அதிகாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments