‘நீட்’ தேர்வு கிடையாது பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்’ தேர்வு அடிப்படையில் இல்லாமல், பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆய்வுக்கூட்டம் தமிழ்நாட்டில் இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் (நீட்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான (சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி) மாணவர் சேர்க்கை, தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ்-2 தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 கல்வி ஆண்டுகளிலும் மத்திய அரசு இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வை பின்பற்ற அறிவுறுத்தியது. அதற்கு தமிழக அரசு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. நிலைப்பாடு மாநில அரசின் கொள்கை ரீதியான எதிர்ப்பையும் மீறி, தமிழ்நாடு தொழில்முறை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான சட்டம் 2006-ன் பிரிவுகளுக்கு முரணாக, ‘நீட்’ தேர்வை இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு அறிமுகப்படுத்த முடியாது என்ற தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு ஏற்கனவே தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும், தற்போதுள்ள இந்திய மருத்துவ முறை மத்திய குழு சட்டத்தில், மாணவர் சேர்க்கைக்கான எந்தவொரு திருத்தத்தையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனையும் கருத்தில் கொண்டு இந்த ஆய்வுக்கூட்டத்தில், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி கல்லூரிகளில், பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. பங்கேற்றோர் கூட்டத்தில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூடுதல் செயலாளர் நாகராஜன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கே.செந்தில்ராஜ், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத், சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments