தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க புதிய சட்டம்: புதிதாக 2 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி சட்டசபையில் மசோதா தாக்கல்

தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்கவும், புதிதாக 2 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கியும் சட்டசபையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தனியார் சட்டக்கல்லூரிகளை
தொடங்குவதற்கு முழுமையாக தடை செய்ய முடியாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அரசானது, தனியார் சட்டக்கல்லூரிகளை தொடங்குவதற்கு முழுமையாக தடை செய்வதற்கு பதிலாக, தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் நிறுவுவதை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தாக்கல் செய்த மசோதாவில், “எஸ்.எஸ்.என். பொறுப்பு கட்டளை, சிவ் நாடார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக கருத்துருவை அனுப்பியிருக்கிறது. சட்டம் இயற்றுவதன் மூலமாக சிவ் நாடார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் தாக்கல் செய்த மற்றொரு மசோதாவில், “சாய் கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பொறுப்பு கட்டளையின் நிறுவனர் மற்றும் மேலாண்மை பொறுப்பாட்சியரால் உயர்கல்வி வழங்குவதற்காக தமிழ்நாட்டில் சாய் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக கருத்துரு அனுப்பியுள்ளது. 2003-ம் ஆண்டு, பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறை விதிகளின்படி, ஒவ்வொரு தனியார் பல்கலைக்கழகமும் ஒரு தனிப்பட்ட மாநில சட்டத்தால் நிறுவப்படுதல் வேண்டும். எனவே, சட்டம் இயற்றுவதன் மூலமாக சாய் பல்கலைக்கழகம் என்ற பெயரில் புதிய தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த 3 சட்ட மசோதாக்களையும் தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி மற்றும் ரகுபதி ஆகியோர் பேசினார்கள். அவர்கள் பேசியதாவது:- இந்த சட்ட மசோதா மூலம் தனியார் பல்கலைக்கழகமாக அவை உருவாகிவிட்டால், அவற்றை கட்டுப்படுத்த அரசால் இயலாது. முழு சுதந்திரமாக அவை செயல்படுவதன் மூலம் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடும். தனியார் பல்கலைக்கழகங்களாக அவற்றை உருவாக்கும் இந்த சட்ட மசோதாவை குழு அமைத்து பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். இந்த சட்ட மசோதாக்களை முழுமையாக எதிர்க்கிறோம். அரசு பல்கலைக்கழகங்கள் அதிகமுள்ள தமிழகத்தில் இது தேவையில்லை. 100 ஏக்கர் நிலமும், ரூ.50 கோடியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் கல்வி வியாபாரமாகிவிடும். இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:- இந்தியாவில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்பட 24 மாநிலங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் பலருக்கும் உயர் கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். மேலும் அவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக மாணவர்களுக்கு 35 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும். இதனால் ஏழை, எளியவர்களுக்கும் தரமான கல்வி வாய்ப்பு கிடைக்கும். மற்ற மாநிலங்களில் மிகக்குறைந்த அளவிலான இடத்தில், குறைந்த நிதியில் பல்கலைக்கழகங்களை தனியார் தொடங்கலாம். ஆனால் இங்கு அப்படி முடியாது. இவ்வாறு அவர் கூறினார். வெளிநடப்பு அதைத்தொடர்ந்து இந்த சட்ட மசோதாக்கள் மீது கூடுதலாக பேசுவதற்கு சபாநாயகர் ப.தனபாலிடம், தி.மு.க. கொறடா வாய்ப்பு கேட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். எனவே சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு தி.மு.க.வினர் வெளியேறினர்.

Comments