ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு | பிப்ரவரி மற்றும் மே மாதம் நடத்தப்படும் | அதிரடி மாற்றங்களை மத்திய அரசு அறிவித்தது

ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் தேர்வு முறையிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக் கான நுழைவுத்தேர்வுகளை ‘சி.பி.எஸ்.இ.’ என்னும் மத்திய கல்வி வாரியம் நடத்தி வந்தது. அதிரடி மாற்றங்கள் குறிப்பாக, மருத்துவ, பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான ‘நீட்’ தேர்வு, ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), என்.ஐ.டி. (தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்), ஐ.ஐ.ஐ.டி. (இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கான ‘ஜே.இ.இ. மெயின்’ தேர்வுகளை ‘சி.பி.எஸ்.இ.’ நடத்தி வந்தது. இதில், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து உள்ளது. தேர்வு நடத்த புதிய அமைப்பு இதுதொடர்பாக டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:- இனி ‘நீட்’ தேர்வு, ‘ஜே.இ.இ.’ (மெயின்) தேர்வுகளை நடத்துவதற்கு ‘என்.டி.ஏ.’ என்னும் தேசிய தேர்வு முகமையை மத்திய அரசு உருவாக்குகிறது. இந்த அமைப்பு, இனி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் ஆவதற்கான தேசிய தகுதித்தேர்வு ‘யு.ஜி.சி.-நெட்’ தேர்வு, எம்.பார்ம் படிப்புக்கான ‘ஜிபாட்’ தேர்வு, நிர்வாக படிப்புக்கான ‘சிமேட்’ தேர்வு ஆகியவற்றையும் நடத்தும். ‘நீட்’ தேர்வு ஆண்டுக்கு 2 முறை மருத்துவ, பல் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வுகளில் பல்வேறு குளறுபடிகள் நிலவி வந்தன. இதுகுறித்து கோர்ட்டுகளில் வழக்குகள் தொடர்கிற நிலையும் உருவானது. இந்த ‘நீட்’ தேர்வில் பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன. முக்கிய மாற்றம், ‘நீட்’ தேர்வை இனி கம்ப்யூட்டர் வழியாகத்தான் எழுத வேண்டும். ‘நீட்’ தேர்வு, ஆண்டுக்கு 2 முறை பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும். ஒரு முறை தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெறாதபோது அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டியது இல்லை. ஒரு வருடம் வீண் ஆகாது. இதற்காகத்தான் ஆண்டுக்கு 2 முறை தேர்வு எழுதும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. 2 தேர்வுகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரு முறையும்கூட தேர்வு எழுத மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள். இரு முறையும் தேர்வு எழுதுகிறவர்களைப் பொறுத்தமட்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்வு மையத்தையும், தேர்வு நாளையும் தேர்வு செய்கிற வாய்ப்பு, மாணவ, மாணவி களுக்கு வழங்கப்படும். தேர்வு நாளைப் பொறுத்தமட்டில் 4 அல்லது 5 நாட்கள் இடைவெளி விட்டு அறிவிக்கப்படும். அதில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு விருப்பமான நாளை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் மாறுபட்ட வினாத்தாள்கள், ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு வினாத்தாள் வழங்கப் படும். சர்வதேச தரத்தில், மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த தேர்வு நடத்தப்படும். கேள்வித்தாள் முன்கூட்டியே கசிவு ஆவதற்கான வாய்ப்பு இருக்காது. மாணவர்கள் விரும்புகிற விதத்தில், அறிவியல்ரீதியில் அமையும். நீட் தேர்வுக்கான பாடத்திட்டம், கேள்வித்தாள் வடிவம், மொழிகள், தேர்வு கட்டணம் ஆகியவற்றில் மாற்றம் இல்லை. தேர்வு அட்டவணை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படும். ‘ஜே.இ.இ.’ (மெயின்) தேர்வு ‘ஜே.இ.இ.’ மெயின் தேர்வு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். ‘யு.ஜி.சி. நெட்’ தேர்வு, டிசம்பர் மாதம் நடத்தப்படும். ‘சிமேட்’ தேர்வும், ‘ஜிபாட்’ தேர்வும் ஜனவரி மாதம் நடத்தப்படும். இலவச பயிற்சி இந்த தேர்வுகளை கிராமப்புற மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டரில் எழுத சிரமப்படுவார்களே என்ற கேள்வி எழும். இந்த தேர்வுகளை அவர்கள் எளிதாக எழுதுவதற்கு வசதியாக, கம்ப்யூட்டரில் எழுதி பயிற்சி பெறுவதற்காக சிறப்பு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. அதில், “கம்ப்யூட்டர் ‘லேப்’ வசதி கொண்ட பள்ளிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு இந்த சிறப்பு பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்; அடுத்த மாதம் 3-வது வாரம் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பயிற்சி மையங்கள் திறந்து இருக்கும்; கிராமப்புற மாணவர்கள் சென்று மாதிரி தேர்வு எழுதி பழகிக்கொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசம்தான்” என கூறப்பட்டு உள்ளது.

Comments