மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கும் பொருந்தும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் விளக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீடு, குரூப்-சி, குரூப்-டி பணியிடங்களுக்கும் பொருந்தும் என மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அருண் ராய் விளக்கம் அளித் துள்ளார். அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த 2016-ல் சட்டம் கொண்டுவந்தது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்த 3% இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டில் அரசாணை வெளியிட்டது. இந்த 4 சதவீத இடஒதுக்கீட்டில் பார்வை குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், செவித்திறன் குறைபாடுடையோர்க்கு 1 சதவீதமும், கை, கால் பாதிக்கப்பட்டோர், (மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் உட்பட) 1 சதவீதமும், புறஉலகு சிந்தனையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகளை உடையவர்கள் (செவித்திறன் குறைபாடு மற்றும் பார்வைத்திறன் குறைபாடு ஆகிய இரண்டிலும் பாதிக்கப்பட்டோர் உட்பட) 1 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகிய அனைத்துக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். ஆனால், இதுகுறித்து அரசின் பல்வேறு துறைகளில் சரியான புரிதல் இல்லை என்று மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. குரூப்-ஏ, குரூப்-பி பணிகளுக்கு மட்டும்தான் இதுதொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும், குரூப்-சி, குருப்-டி பணியிடங்களுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் தேர்வாணையங்கள் கூறுகின்றன. இதுகுறித்து, மாநில மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அருண் ராயிடம் கேட்டபோது, ‘‘ஏற்கெனவே இருந்த 3 சதவீத இடஒதுக்கீட்டு அரசாணை குரூப்-சி, குருப்-டி பணிகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. 3 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையும் குரூப்-சி, குரூப்-டி பணியிடங்களுக்கு பொருந்தும்’’ என்றார்

Comments