ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ நிதித்திட்டம்-1995 என்ற திட்டத்தை மாற்றி, ஓய்வூதியதாரர்களுக்கான (வாழ்க்கைத் துணை உள்பட) மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2014 கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் 1.7.2014 முதல் 30.6.2018 வரை யுனைட்டைட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில், அதை அமல்படுத்தும் நிறுவனம் தொடர்பான ஒப்பந்தம் விடப்பட்டது. அதை தொடர்ந்து அதற்கான அதிகாரிகளை கொண்ட குழு, 28.6.2018 அன்று அறிக்கை சமர்ப்பித்தது. அதில், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2018-ஐ அமல்படுத்த யுனைட்டைட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தையே தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தையே அரசு தேர்வு செய்துள்ளது. இந்த திட்டம் 1.7.2018 முதல் 30.6.2022 வரை செயல்பாட்டில் இருக்கும். காப்பீட்டுக்கு தேவையான ஓராண்டு பிரீமியம் தொகையான ரூ.3 ஆயிரத்து 800-ஐ ஜி.எஸ்.டி.யையும் சேர்த்து அரசு செலுத்திவிடும். பின்னர் ஜூலை மாதத்தில் இருந்து ஓய்வூதியதாரரின் கணக்கில் இருந்து மாதம் ரூ.350-ஐ அரசு பிடித்தம் செய்துகொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments