நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் குளறுபடி: தமிழக மாணவர்களின் எதிர்கால கனவு தகர்ந்து போகாதா? சி.பி.எஸ்.இ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி.

நீட் தேர்வின் தமிழ் வினாத்தாள் குளறுபடியால், தமிழக மாணவர்களின் எதிர்கால கனவு தகர்ந்து போகாதா என்று சி.பி.எஸ்.இ.க்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. கூடுதல் மதிப்பெண் கேட்டு வழக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. டி.கே.ரங்கராஜன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் குளறுபடியாக உள்ளன. எனவே அந்த கேள்விகள் அனைத்துக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்களை தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் பரிந்துரை அப்போது சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான வக்கீல் நாகராஜன், “நாடு முழுவதும் நீட் தேர்வின் ஆங்கில வினாத்தாள் ஒன்று தான். அதில் இருந்து மாநில மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பரிந்துரைத்த நிபுணர்கள் மூலம் தான் நீட் ஆங்கில வினாக்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதில் சி.பி.எஸ்.இ. தரப்பில் எந்த தவறும் இல்லை. இந்த விஷயம் தொடர்பாக தேர்வு எழுதிய மாணவர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை. மனுதாரர் பொதுநல வழக்காக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார்” என்று வாதாடினார். மாணவர்களின் எதிர்கால கனவு அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது:- “நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் கேள்விகள் குளறுபடியாக உள்ளன. அந்த வினாத்தாளில் ராகம் என்ற வார்த்தைக்கு பதிலாக நகம் என்றும், இடைநிலை என்பதற்கு கடைநிலை என்றும் ரத்தநாளங்கள் என்பதை ரத்தநலன் என்றும் குளறுபடியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதை சரி என்பதா? கேள்விகளில் தெளிவு இல்லாமல் இருப்பதற்கும், தவறுதலாக இருப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? இதனால் தமிழக மாணவர்களின் எதிர்கால கனவு தகர்ந்து போகாதா? தரவரிசை பட்டியலில் அவசரம் ஏன்? அதுமட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பில் குளறுபடி குறித்து மாநில அரசிடம் கேட்டு முடிவு எடுத்து இருக்க வேண்டும். கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தரவரிசை பட்டியல் வெளியிட்டது ஏன்? இந்த விஷயத்தை ஏன் நீங்கள் ஜனநாயகப்பூர்வமாக அணுகவில்லை? பீகாரில் நீட் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி? அதேபோல தமிழகத்தில் ஏழை மாணவர்கள் வேலை பார்த்துக்கொண்டே சிரமப்பட்டு படித்து ஏராளமானோர் பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வை எழுதி உள்ளனர். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தகுந்த முடிவு எடுத்து இருக்கலாம் அல்லவா? அதேபோல் பள்ளியில் நேரடியாக படிக்காமல் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்காததும் கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தீர்ப்பு ஒத்திவைப்பு பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Comments