புதிய பாட திட்டம் குறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

புதிய பாடத்திட்டத்தை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது. படம்; எம்.முத்துகணேஷ் புதிய பாட திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களை அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தயார்படுத்தும் வகையில் தமிழக அரசு கல்வி முறையை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் முதல்கட்டமாக 1,6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு வல்லுனர்களைக் கொண்டு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் மாவட்டத்தில், ஒரு பாடத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம்1, 6, 9 மற்றும் 11ம் வகுப்பு ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவ்வாறு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இப்பயிற்சி மாவட்டம் முழுவதும் 17 மையங்களில் வரும் 21ம் தேதி வரை நடைபெறும். நேற்று சேலையூர் சீயோன் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமை செயிண்ட் தாமஸ் மவுண்ட் மாவட்ட கல்வி அலுவலக துணை ஆய்வாளர் வி.கிருபாகரன் தொடங்கிவைத்தார். இந்த பயிற்சி முகாமில் புதிய பாடத் திட்டத்தின் படி இனி எப்படி பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி புத்தகம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில், புதிய பாடத் திட்டங்களுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது, புரியும் வகையில் எப்படி பாடங்களை நடத்துவது, பயிற்சிகளை எவ்வாறு அளிப்பது உள்ளிட்ட ஆலோசனைகள், அறிவுரைகள் இருக்கும். தகவல்கள்.. அரசு பள்ளி ஆசிரியர்கள் முறையான வழிமுறைகளில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடங்களை திட்டமிடல், வரைபடத்துடன் விளக்குதல், வகுப்புகளில் தேர்வுகள் நடத்துதல் உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்யும் வகையிலான தகவல்கள் இந்தப் பயிற்சி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments