தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 1-ம் தேதி தொடங்கி 7-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 2,639 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பின. இதேபோல் 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 862 இடங்கள் நிரப்பப்பட்டன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியின் 153 பிடிஎஸ் இடங்கள் நிரம்பின. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான 915 பிடிஎஸ் இடங்களில் 246 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 669 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த மாணவர்கள், தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், “தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு 2 வார காலத்துக்குள் புதிய தர வரிசைப் பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும்” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு முதல் கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது’’ என்று கூறினர்.

Comments