நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு மதிப்பெண் சிபிஎஸ்இ நடவடிக்கையை பொறுத்து தமிழக அரசு முடிவு செய்யும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நீட் தேர்வை தமிழில் எழுதியவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பில், சிபிஎஸ்இ எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து தமிழக அரசு முடிவு செய்யும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் (மண்டல கண் மருத்துவ இயல் நிலையம்) 200-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. மருத்துவமனை இயக்குநரும் கண்காணிப்பாளருமான ப.சு.மகேஸ்வரி விழாவுக்கு தலைமை தாங்கினார். மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்து பலூன்களை பறக்கவிட்டனர். அனைவரும் கண் தானம் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். பின்னர் மருத்துவமனையில் நடந்த கண் விபத்து சிகிச்சை கருத்தரங்கில், இந்த மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மற்றும் செவிலிய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்த அரசு கண் மருத்துவமனை தொடங்கி 200 ஆண்டுகள் ஆகிறது. உலகத்திலேயே இரண்டாவதாகவும் ஆசியாவில் முதலாவதாகவும் தொடங்கப்பட்ட கண் மருத்துவமனை இதுவாகும். கண் தானம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை சிறப்பாக செய்யும் இந்த மருத்துவமனையில் இதுவரை 2.65 லட்சம் பேருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. கண் தானத்தின் மூலம் மருத்துவமனையில் பல பேர் பார்வை பெற்றுள்ளனர். 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.50 லட்சம் செலவில் இந்த மருத்துவமனையில் நினைவு வளைவு அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுதிய மாணவர்களுக்கு தமிழக அரசு ஆதரவாக இருக்கும். முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளை சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டுள்ளது. விரிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. சிபிஎஸ்இ என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதற்கு உட்பட்டு எங்களுடைய நடவடிக்கை அமையும். எங்களுடைய நடவடிக்கை தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்றார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

Comments