தனியார் நிறுவனங்கள் மூலம் பள்ளி நேரத்தில் நீட், ஜெஇஇ தேர்வுக்கு பயிற்சி அளித்தால் கடும் நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பள்ளி நேரத்தில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலம் நீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: ஒருசில தனியார் பள்ளிகளில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக பள்ளி நேரத்தில் நீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் இதற்கான கட்டணம் பள்ளி கல்விக்கட்டணத்தோடு வசூலிக்கப்படுவதாகவும் இப்பயிற்சியில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக தனியார் பள்ளிகளை எச்சரிக்கை செய்ய வேண்டியது அவசியமாகிறது. வணிக நோக்கில் பயிற்சி அதன்படி, எந்த தனியார் பள்ளியும் பள்ளி நேரத்தில் பள்ளி வளாகத்தில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக வணிகநோக்கில் நீட், ஜெஇஇ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது. தனியார் பயிற்சி மையங்கள் மூலம் அளிக்கப்படும் பயிற்சியில் சேருமாறு எந்த மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தனியார் பள்ளி கல்விக்கட்டண நிர்ணயக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது. கூடுதல் கட்டணத்துக்குத் தடை தனியார் பயிற்சி மையங்கள் மூலமாக அளிக்கப்படும் நுழைவுத்தேர்வுக்கான கட்டணம் என்று சொல்லி எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்க தடை விதிக்கப்படுகிறது. தேர்வு வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடப்பிரிவுகள் மற்றும் பாடங்களுக்காக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அங்கீகாரம் வாபஸ் பெறப்படும் மேற்கண்ட விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டால் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால் பள்ளியின் அங்கீகாரம் வாபஸ் பெறப்படும். இந்த விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments