மதுரை ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் மீண்டும் வெளியிடப்படுமா?.

மதுரை ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் மீண்டும் வெளியிடப்படுமா?. மதுரை ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக தமிழகத்தில் மீண்டும் மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியிடப்படுமா? என்று தமிழக அரசு அதிகாரியை கேட்டதற்கு சி.பி.எஸ்.இ.யின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொருத்துதான் எதுவும் கூறமுடியும் என்று தெரிவித்தார். நீட் தேர்வு தமிழகத்தில் தேசிய தகுதி மற்றும் நுழைவு (நீட்) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவசேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 1-ந்தேதி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அதே இடத்தில் மருத்துவ பொது கலந்தாய்வு கடந்த 2-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற்றது. அரசு கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 447 இடங்கள், ராஜா முத்தையா கல்லூரியில் உள்ள 127 இடங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் உள்ள 65 இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் உள்ள 3 ஆயிரத்து 501 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டு இருக்கின்றன. 2-ம் கட்ட கலந்தாய்வு முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத அரசு ஒதுக்கீட்டு இடங்களையும், அதேபோல் அகில இந்திய மருத்துவ படிப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாத இடங்களையும் நிரப்புவதற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ படிப்பு கலந்தாய்வு வருகிற 23-ந்தேதி நிறைவடைய இருக்கிறது. அதன்பிறகு 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுயநிதி கல்லூரிகளில் 723 எம்.பி.பி.எஸ்., 645 பி.டி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இருக்கின்றன. இந்த நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 16-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாளில் பிழைகள் இருந்தன என்றும், அதன் காரணமாக அவர்களுக்கு 196 மதிப்பெண் கூடுதலாக வழங்கவேண்டும் என்றும், மருத்துவ தரவரிசை பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. கோர்ட்டு தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மீண்டும் தயாரித்து வெளியிடவேண்டும். ஏற்கனவே மருத்துவ கலந்தாய்வில் இடம் கிடைத்த 3 ஆயிரத்து 501 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்திருப்பார்கள். கல்விக்கட்டணமும் செலுத்தி இருப்பார்கள். இவர்கள் கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டால் ஏற்கனவே இடம் கிடைத்த மாணவர்களுக்கு மீண்டும் இடம் கிடைப்பது சிரமமே. நீட் தேர்வு குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகு மருத்துவ கலந்தாய்வு என்னவாகும்? என்று ஒரு அரசு அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:- ‘நீட்’ தேர்வு வந்த பிறகு தேர்வு மற்றும் மதிப்பெண் ஆகியவை சி.பி.எஸ்.இ. அதிகாரத்திற்கு உட்பட்டது. இனிமேல் சி.பி.எஸ்.இ.யின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொருத்துதான் அமையும். தமிழக அரசின் மருத்துவ கலந்தாய்வு குறித்து கூற இயலும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments