கேள்விக்குறியாகும் மாணவர்களின் கல்வி

கூடுவாஞ்சேரி அருகே நந்திவரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் பாடத்துக்கு ஆசிரியர்கள் இல்லா ததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவிக் கின்றனர். கூடுவாஞ்சேரி அருகில் நந்திவரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் மேல்நிலைக் கல்வியில் பொது கணினி அறிவியல், வணிகவியல், இயற்பியல், கணிதவியல், வணிக கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் பொது கணினி அறிவியல் பிரிவில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பிரிவுக்கு ஆசிரியர் இல்லை. மேலும் பாட புத்தகங்களும் வழங்கப்படவில்லை என மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெற்றோர் கள் கூறும்போது, ‘‘இந்த பள்ளியில் பொது கணினி அறிவியல் பிரிவில் ஆசிரியர்கள் இல்லை. பள்ளி தொடங்கி இதுவரை இந்தப் பிரிவு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படவில்லை. இதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பிரபாகர் கூறியதாவது: தற்போது 11-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் உள்ளதால் கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், கணினி தொழில் நுட்பம் என மூன்று வகையாக பாடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் கணினி அறிவியல் நடத்தும், ஒரே ஆசிரியரால் மூன்று பாடங்களையும் எடுக்க முடியாது. மேலும் புதிய பாடத்திட்டங்களுக்காக பாட புத்தகங்கள் இன்னும் அரசு சார்பில் வழங்கப்படவில்லை. கூடுதல் ஆசிரியர் தேவை என்பதை மாவட்ட கல்வி அதிகாரியிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.

Comments