தமிழில் பயிலும் மாணவருக்கு தரமான கல்வி கிடைக்கிறதா? சிபிஎஸ்இ அமைப்புக்கு நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் தமிழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தரத்துக்கு இணையான கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறதா? என்பதை சிபிஎஸ்இ விளக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இதை நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது நேற்று விசாரித்தனர். அப்போது, நீட் தேர்வு கேள்வித்தாள் எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கு மாற்றப்படுகிறது, நீட் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது. நீட் தேர்வு தொடர்பான கேள்விகள் எந்த பாடத் திட்டத்தில் இருந்து எடுக்கப்படுகிறது, தமிழில் பயிலும் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இணையான கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறதா? என்பது தொடர்பாக சிபிஎஸ்இ பதில் அளிக்க உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை வரும் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவை த்தனர்.

Comments