கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பல்கலைக்கழக மானியக்குழு அமைத்த சம்பள மறுஆய்வு குழு, பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆளுகைக்கு உட்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான அதிகாரிகளுக்கு ஊதியத்தை உயர்த்த சிபாரிசு செய்தது. அதை ஏற்றுக்கொண்டு ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை இயக்குனர் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன் அடிப்படையில், அந்த சிபாரிசை தமிழக அரசு ஆய்வு செய்து இந்த அரசாணையை பிறப்பிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது. இந்த சம்பள உயர்வு, 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியிட்டு அமல்படுத்தப்படும். கல்லூரி ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆகவும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 60 ஆகவும் நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.| DOWNLOAD

Comments