‘நீட்’ தேர்வு வினாத்தாள் பிழை விவகாரம் தமிழக அரசுதான் மொழி பெயர்ப்பாளர்களை வழங்கியது மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

‘நீட்’ தேர்வு வினாத்தாள் பிழை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற மேல்சபையில் பதில் அளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், தமிழக அரசுதான் மொழி பெயர்ப்பாளர்களை வழங்கியது என தெரிவித்தார். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு சி.பி.எஸ்.இ., கடந்த மே மாதம் ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தியது. அந்த தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் 49 கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டு இருந்ததாக பிரச்சினை எழுந்தது. இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மேல்சபையில் அ.தி.மு.க. எம்.பி., விஜிலா சத்யானந்த், நேற்று பூஜ்ய நேரத்தின்போது எழுப்பினார். அப்போது அவர், “நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகளில் மொழி பெயர்ப்பு தவறாக செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் அவதியுற்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது” என்று கூறினார். அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்கையில், “நீட் தேர்வு வினாத்தாளை தமிழில் மொழி பெயர்ப்பதற்கு மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசுதான் வழங்கியது. அடுத்த ஆண்டு முதல் மாநில அரசுகள் வழங்கிய மொழி பெயர்ப்பு வல்லுனர்களின் மொழி பெயர்ப்பு சரியாக இருக்கிறது என்பதற்கு அந்தந்த மாநில அரசிடம் இருந்து பிரமாண பத்திரம் பெறப்படும்” என்று கூறினார். நீட் தேர்வை மாணவர்கள் தொலைவிடங்களுக்கு சென்று எழுத நேரிட்டது பற்றியும் அ.தி.மு.க. எம்.பி., விஜிலா சத்யானந்த் குறிப்பிட்டார். அதற்கு மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு எழுத வேறு இடங்களுக்கு மாணவர்களை அனுப்பும் நிலை கூடாது” என்று ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளேன் என கூறினார். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் பதில் அளித்த மந்திரி பிரகாஷ் ஜவடேகர், நாடு முழுவதும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்துக்கான நேர்காணல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறினார். முன்னதாக கேள்வி நேரத்தின்போது, சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விடாதபடிக்கு தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments