கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவருக்கு திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம் பள்ளிக்கல்வி துறையின் ‘நீட்’ பயிற்சியில் படித்து வெற்றி பெற்றவர்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவருக்கு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. இவர் பள்ளிக்கல்வி துறை நடத்திய ‘நீட்’ பயிற்சியில் படித்து வெற்றி பெற்றவர். மருத்துவ படிப்பு தரவரிசைப்பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள் மிகவும் சொற்ப அளவிலேயே இடம்பிடித்து இருந்தனர். அதாவது, 1 முதல் 1000 தரவரிசையில் 4 பேர், 1,001 முதல் 3,000 வரை 8 பேர், 3001 முதல் 5000 வரை 16 பேர் உள்பட 1,320 பேர் இடம்பெற்று இருந்தனர். இதில் முதல் 3 ஆயிரம் தரவரிசையில் இடம்பிடித்திருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 7 மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைத்து இருக்கின்றன. நேற்று நடந்த கலந்தாய்வில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் டி.அலெக்ஸ் பாண்டியனுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்து இருக்கிறது. இதுகுறித்து அந்த மாணவர் கூறியதாவது:- திருச்சி கல்லூரியில் இடம் கடலூர் மாவட்டம் மா.புடையூரில் வசித்து வருகிறேன். என்னுடைய தந்தை அரசு பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். மா.புடையூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். அப்போது நீட் தேர்வுக்காக அரசு தரப்பில் (பள்ளிக்கல்வி துறை) என்னை சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சி கொடுத்தார்கள். அந்த பயிற்சி எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. அதன் மூலம் ‘நீட்’ தேர்வில் 306 மதிப்பெண் பெற்றேன். இப்போது கலந்தாய்வில் கலந்துகொண்டு திருச்சியில் உள்ள கே.ஏ.பி.வி. அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்து இருக்கிறது. எனக்கு சந்தோஷமாக உள்ளது. என்னுடைய ஆசை கலெக்டராக வேண்டும் என்பது தான். எம்.பி.பி.எஸ். படிப்பை படித்து முடித்ததும் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி கலெக்டராக வருவேன். பொதுமக்களுக்கு சமூக சேவை செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு ஜூலை 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்து இருந்த நிலையில், இன்றுடன் (சனிக்கிழமை) அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. இதையடுத்து நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவது எப்போது? என்பது குறித்தும், அதேபோல் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு எப்போது நடத்துவது? என்பது குறித்தும் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

Comments