தமிழக மருத்துவ கலந்தாய்வில் கேரளாவில் படித்தவருக்கு அனுமதி உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் பிளஸ் 2 பயின்றவர்களை தமிழக மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், எரும்பிலியைச் சேர்ந்த அதுல் சந்த், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எரும்பிலியில்தான் வசிக்கின்றனர். 7-ம் வகுப்பு வரை குலசேகரம் பள்ளியிலும், 8 முதல் பிளஸ் 2 வரை கேரளாவில் சிபிஎஸ்இ பள்ளியிலும் படித்தேன். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் 339 மதிப்பெண் பெற்றேன். தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு அழைப்பு கடிதம் வரவில்லை. கேரளாவில் நீட் தேர்வு எழுதியதால் என்னை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்து சான்றிதழ்களும் தமிழகத்தில்தான் பெறப்பட்டுள்ளது. படிப்பதற்காக கேரளாவுக்கு சென்றேன். எனவே, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் என்னை தமிழக மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. இதேபோல் கேரளாவில் பிளஸ் 2 வரை படித்து தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய தங்களையும் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மேலும் இரு மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர் இந்த மனுக்கள் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் மனுதாரர்கள் 3 பேரை யும் தமிழக ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இந்த உத்தரவு இவ்வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதி உத்தரவிட்டார்.

Comments