படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர்வது எப்படி?

பல்வேறு காரணங்களால் சிலர் படிப்பை பாதியிலேயே கைவிட்டிருக்கலாம். குடும்ப சூழல், பொருளாதார வசதிக்குறைவு, பெற்றோரின் திடீர் இழப்பு, திடீர் விபத்தால் உடல் பாதிப்பு, கற்க இயலாமை என்பது போன்ற காரணங்களால் பலர் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது உண்டு. வயது ஏறிவிட்டால், இடை நின்றவர்களை பள்ளி - கல்லூரிகளில் சேர்க்க தயங்குவார்கள். ஆனால் கல்வியை இழந்தபிறகுதான் பலருக்கும் ஏன் படிப்பதை நிறுத்தினோம்? என்ற எண்ணம் எழும். நம் பெற்றோர் காலத்தில், படிப்பை பாதியில் விட்டவர்கள் மற்றும் பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி அறிவு போதிப்பதற்காக அறிவொளி இயக்கங்கள் செயல்பட்டன. இந்த இயக்கத்தால் எண்ண கற்றுக் கொண்டவர்களும், பெயர் எழுதப்படித்தவர்களும் அனேகம். இன்றும் அதுபோல படிப்பை பாதியில் விட்டவர்கள், இடைநின்றவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. தேசிய அளவில், படிப்பில் இடை நின்றவர்கள் கல்வி வளர்ச்சிக்காக தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling-NIOS) எனும் மத்திய அரசு அமைப்பு செயல்படுகிறது. இந்த பள்ளிக் கல்வி அமைப்பில் 8-ம் வகுப்புக்கு குறைந்த படிப்பில் இடை நின்றவர்கள், நேரடியாக 10-ம் வகுப்பு தேர்வெழுத முடியும். அதற்கு அந்த நபர் 10-ம் வகுப்பு படிக்கும் வயதான, 14 வயதை எட்டியிருந்தால் போதும். எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் எந்த வகுப்புடன் படிப்பை நிறுத்தியிருந்தாலும் மேற்கொண்டு படிப்பை தொடர முடியும். அதேபோல 10, 11-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர்கள், நேரடியாக 12-ம் வகுப்பை தேர்வெழுதலாம். இப்படி தேர்வெழுதி தேர்ச்சி பெறுபவர்கள், அதற்குப் பின்பு பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ நேரடியாகச் சேர்ந்து படிக்க முடியும். தேசிய சிறந்த நிலைப் பள்ளிக்கு நாடு முழுவதும் பல்வேறு கிளை மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்திலும் இந்த அமைப்பிற்கு கிளை உள்ளது. சென்னை மண்டல கிளையில் தமிழக மற்றும் பாண்டிச்சேரி மாணவர்கள் கல்வி பெறலாம். படிப்பை இடைநிறுத்தியவர்கள் சுய உறுதிமொழி அளித்து சேரலாம். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிப்பாடங்களில் ஒன்று அல்லது 2 பாடங்கள், மேலும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், வர்த்தகம், உளவியல், இந்திய கலாச்சாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரரேஷன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் இருந்து ஏதேனும் 3 பாடங்கள் தேர்வு செய்து மொத்தம் 5 பாடங்களை படிக்க வேண்டும். கூடுதலாக ஒன்றிரண்டு விருப்பப் பாடங்களை படிக்கவும் வழி உண்டு. விண்ணப்பக் கட்டணம், புத்தக கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மற்றும் அலுவலகங்களில் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை உண்டு. பாடவகுப்புகளும் நடைபெறும். விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம். எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆண்டிற்கு 2 நிலைகளாக பிரித்து மாணவர் சேர்க்கையில் இடம் அளிப்பார்கள். ஆரம்பகாலத்தில் ஆங்கிலம், இந்தி வழியில் மட்டுமே படிக்க முடிந்த இந்த அமைப்பில் இப்போது தமிழ் வழியிலும் படிக்க முடியும். இது பற்றிய விவரங்களை www.nios.ac.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். சென்னை மண்டல அலுவலகத்தை என்ற 044- 28442239 தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். சென்னை மண்டல அலுவலக முகவரி : மண்டல இயக்குனர், என்.ஐ.ஓ.எஸ்., அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, லேடி வெல்லிங்டன் வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-5.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||