அரசு ஊழியர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் வருமான வரி முதன்மை ஆணையர் அறிக்கை

அரசு ஊழியர்களும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என வரித்துறை அறிவித்துள்ளது. ரூ.2.50 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரித் தாக்கலை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை சென்னை முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, வருமான வரி தாக்கல் செய்துள்ள புள்ளிவிவரங்கள் அடிப்படையில், சென்னையில் உள்ள சுமார் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை. அரசு ஊழியர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொண்டால்தான் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும். அரசு ஊழியர்களே வருமான வரி தாக்கல் செய்யாமல் விதி மீறல் செய்தால், சமூகத்தின் இதர மக்களை குறை சொல்வதற்கு நமக்கு எந்த உரிமையும் இருக்காது என்று கூறியுள்ளார். 2018-19 நிதியாண்டிலிருந்து நாட்டின் ஒவ்வொருவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாத சம்பளதாரர்கள் தங்களது வருமான வரி படிவத்தை 31.07.2018க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி ஒவ்வொரு மாதச் சம்பளதாரரும் கடந்த நிதி ஆண்டுக்கான (2017-18) வருமான வரி படிவத்தை குறிப்பிட்ட இறுதி நாளுக்குள் செலுத்த வேண்டும். தாமதமாக தாக்கல் செய்யப்படும் வரி படிவங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ரூ.5,000 வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த தவறினால் 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது. ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வரிச் சலுகைகளையும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. பல்வேறு வரிதாரர்களும், ஓய்வூதிய பங்களிப்பு, காப்பீடு பிரீமியம், வீட்டுக் கடன் திருப்பி செலுத்துவது போன்ற வகைகளில் வரிச் சலுகை பெறுகின்றனர். வீட்டுக் கடனுக்கான வட்டியிலும் வரிச் சலுகை உள்ளது. இந்த வகைகளில் சலுகை பெறாமல், ரூ.2.50 லட்சத்துக்குள் வருமானம் உள்ளவர்கள் வரித் தாக்கல் செய்ய வேண்டிய தேவையில்லை. பல்வேறு வகைகளில் இதர வருமானம் உடையவர்கள், குறிப்பாக வட்டி வருமானம், முதலீடுகளின் மீதான ஆதாயம், வீட்டு வாடகை வருமானம், கூட்டுறவு சங்கங்களின் டிவிடெண்ட் உள்ளிட்டவற்றையும் சேர்த்து ரூ.2.50 லட்சம் மேற்பட்ட வருமானம் கொண்டவர்கள் வரித் தாக்கலை குறிப்பிட்ட நாளுக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருமானங்களை மறைத்து வரித் தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் தனியாக அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக அரசு அலுவலர்கள் தங்களது துறை உயரதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் என்றும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments