ஆசிரியர்கள் எல்லோருமே ‘பகவான்’களாக வேண்டும்

ஆசிரியர்கள் சமுதாய சிற்பிகள். என்ஜினீயர், டாக்டர், கட்டிடக்கலை நிபுணர், பட்டய கணக்காளர் என பல்வேறு துறை நிபுணர்களையும் உருவாக்கும் பிரம்மாக்கள். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கு முன்னால் ஆசிரியர்களை வைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இடத்தை வழங்கி இருக்கிறோம். நல்ல விதைதான் நல்ல மரமாகும்; நல்ல மரம்தான் சுவையான சிறந்த கனியை தரும். அதுபோல மாணவ சமுதாயத்தை மிகச்சிறந்த மனித சமுதாயமாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஆசிரியர் பணி ஊதியம் வாங்கும் பணி என்றாலும், அதை தன்னலமற்ற சேவையாக கருதி அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபடும் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மகத்தான ஆசிரியர்தான் பகவான். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், ஒரே நாளில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி, மக்களின் மனதில் இமயமாக உயர்ந்து விட்டார். ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அருகே அருங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. கல்விப்பணியில் இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், வெளியகரம் பள்ளி மாணவ-மாணவிகள் அவரை சூழ்ந்துகொண்டு தங்களை விட்டு போகக்கூடாது என்று கூறி கட்டிப்பிடித்து கதறி அழுததும், அந்த அன்பின் சுமையை தாங்க முடியாமல் பகவானும் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்தியதும் இதுவரை எங்கும் நடக்காத ஒரு சம்பவம். ஆசிரியர்-மாணவர்கள் இடையேயான பரஸ்பர அன்பையும், பற்றுதலையும், அக்கறையையும் பறைசாற்றிய நெகிழ்ச்சியான தருணமாக இது அமைந்தது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் ஒட்டுமொத்த இந்தியாவே பகவானை நோக்கி திரும்பியது. பிரபல இசைஅமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகர் விவேக் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஆசிரியர் பகவானுக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். மாணவர்கள்-பெற்றோரின் வற்புறுத்தலை தொடர்ந்து ஆசிரியர் பகவானின் இடமாறுதலை கல்வித்துறை ரத்து செய்து, அந்த பள்ளியிலேயே பணியாற்ற அனுமதித்து இருக்கிறது. ஆசிரியர்-மாணவர் உறவு பாடபுத்தகத்தோடு நின்றுவிடுவது இல்லை; அதற்கு மேலும் உள்ளது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குபவர் ஆசிரியர் பகவான். ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியராக மட்டும் அல்லாமல் ஒரு சகோதரனாக இருந்து தாயினும் சாலப்பரிந்து அவர்களுக்கு கல்வியை போதிக்கிறார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நல்வழிப்படுத்துகிறார். பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பொம்மராஜுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பகவானின் தந்தை கோவிந்தராஜ் நெசவுத் தொழிலாளி. தாயார் தெய்வானை ஆந்திர மாநிலம் அம்மபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். பகவானின் அண்ணன் ராஜேஷ் பெங்களூருவில் பிளம்பராக வேலை பார்க்கிறார். தம்பி யோகராஜ் எம்.ஏ. படித்து வருகிறார். சகோதரி சுதா திருமணம் முடிந்து அம்மபள்ளியில் கணவருடன் வசித்து வருகிறார். மாணவர்களுக்கும் தனக்கும் இடையேயான உறவை ஆசிரியர் பகவான் பகிர்ந்து கொண்டார்... அவர் கூறியதாவது:- சாதாரணமாக ஆசிரியர் என்பவர் உயர்ந்த இடத்தில் இருப்பவர் போலவும், மாணவர்கள் அவரை தூரத்தில் இருந்து பார்த்து பேச வேண்டும் என்பது போன்ற முறையை நான் கடைபிடிக்கவில்லை. இங்கு படிக்க வரும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களே. ஆங்கிலம் என்பது கற்றுக்கொள்ள மிகவும் கஷ்டமான மொழி என்ற எண்ணத்தை நாம் மாற்றவேண்டும். இதற்காக வகுப்பறையில் நான் புத்தகத்தை கையில் எடுத்து பாடம் நடத்தாமல் அன்றைக்கு நடத்த இருக்கும் பாடத்தை கதை சொல்வது போல் கூறி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவேன். மாணவர்களுக்குள் சிறு சிறு குழுக்களை அமைத்து சந்தேகங்களை அவர்களே கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள வகை செய்தேன். அந்த குழுக்கள் இடையே வினாடி-வினா போட்டி நடத்தி அவர்களை ஊக்குவித்தேன். மாணவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் நான் ஒரு நண்பனைப்போல்-சகோதரனைப்போல் அவர்களுடன் பழகுகிறேன். அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவதோடு, உணவையும் நாங்கள் பரிமாறிக் கொள்வது உண்டு. தவறு செய்யும் மாணவர்களை பலர் முன்னிலையில் தண்டிக்காமல், அவர்களை தனிமையில் அழைத்து அறிவுரை வழங்குவேன். என்னுடைய இந்த அணுகுமுறையால்தான் மாணவர்களுக்கும் எனக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்ததாக கருதுகிறேன். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை கடமையாக மட்டும் கருதாமல், அவர்களுடைய நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு கூறிய பகவானின் வார்த்தைகளில், மாணவ சமுதாயத்தின் மீதான ஈடுபாடும் அக்கறையும் வெளிப்பட்டது. நாட்டில் இப்படி எத்தனையோ ‘பகவான்’கள் இருக்கிறார்கள். அவர்கள் வணக்கத்துக்கும், பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள். இன்னும் நிறைய ‘பகவான்’கள் உருவாக வேண்டும். ஆசிரியர்கள் எல்லோருமே ‘பகவான்’களாக வேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசை.

Comments