1 முதல் 5-ம் வகுப்பு வரை என்சிஇஆர்டி பரிந்துரை செய்யாத புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட நேரிடும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

1 முதல் 5-ம் வகுப்பு வரை என்சிஇஆர்டி எனும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்யாத புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட விதிகளை மீறி தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை 8 பாடங்கள் போதிக்கப்படுகின்றன. 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதி பின்பற்றப்படுவது கிடையாது. எனவே என்சிஇஆர்டி விதிகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது என உத்தரவிட்டு இருந்தார்.இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 8 பாடங்களை நடத்துகின்றனர். இதற்காக தனியார் புத்தக பதிப்பகங்களும், சிபிஎஸ்இ பள்ளிக்கூடங்களும் கைகோர்த்து புத்தக சுமையை குழந்தைகள் மீது திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். 1-ம் வகுப்பு மாணவருக்கு உலகிலேயே மிகச்சிறிய விமானம் எது என்றும், இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது என்றும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன’’ என்றார். இதுதொடர்பாக மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திக்கேயனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி, ‘‘என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ள பாடங்களைத் தவிர தனியார் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை வாங்கக்கூடாது. மீறி பயன்படுத்தினால் என்சிஇஆர்டி பரிந்துரை செய்யாத புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட நேரிடும்’’ என எச்சரித்து தீர்ப்புக்காக இந்த வழக்கை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||