மாணவர்கள் தேர்வுத்தாள் மறு மதிப்பீட்டில் மாபெரும் ஊழல் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட 10 பேர் மீது வழக்கு சென்னை, ஆக.2- சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உலக அளவில் புகழ் பெற்றதாகும். இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு உலகளவில் உள்ள நிறுவனங்கள் அதிகளவில் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்துகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் தரம் வாய்ந்த மாணவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் உலகளவில் புகழ்பெற்ற நிறுவனங்கள் இங்குள்ள மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்த பெயரையும், புகழையும் கெடுக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபகாலமாக நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலக அளவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரத்தை அவநம்பிக்கையோடு பார்க்க வைத்துள்ளது. மாபெரும் ஊழல் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீடு நடந்தது. இதில் மிகப்பெரிய அளவில் மாபெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார். இதன் முதல் தகவல் அறிக்கை நகல் சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்காக விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 73 ஆயிரத்து 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த இவர்கள் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் 16 ஆயிரத்து 636 மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளனர். இதில்தான் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சம் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் தேர்ச்சியடைந்த மாணவர்களிடமிருந்தும், அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் இருந்தும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சமாக பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் மறுமதிப்பீட்டில் உண்மையிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களிடம் இருந்தும் பணம் வசூலிக்கப்பட்டு மாபெரும் மோசடி அரங்கேற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் கூட்டு சதி உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளின் கீழும், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழும் போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட 10 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. அவர்களது பெயர் விவரம் வருமாறு:- பெயர் விவரம் 1. டாக்டர் ஜி.வி.உமா - அண்ணா பல்கலைக்கழக எம்.சி.ஏ. பாடப்பிரிவில் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானத்துறை பேராசிரியை. இவர் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்தவர். 2. டாக்டர் பி.விஜயகுமார் - உதவி பேராசிரியர், திண்டிவனத்தில் உள்ள அண்ணாபல்கலைக்கழக கல்லூரி முதல்வர் பொறுப்பு. முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளர், (அண்ணா பல்கலைக்கழகம் - திண்டிவனம்) 3. டாக்டர் ஆர்.சிவகுமார் - உதவி பேராசிரியர், கணக்கு (அண்ணா பல்கலைக்கழகம் - திண்டிவனம்). 4. ஆர்.சுந்தரராஜன் - தேர்வு நடத்துபவர், என்.பி.ஆர். என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி. 5. எம்.மகேஷ்பாபு - தேர்வு நடத்துபவர், எஸ்.கே.பி. என்ஜினீயரிங் கல்லூரி. 6. என்.அன்புச்செல்வன் - தேர்வு நடத்துபவர், எஸ்.கே.பி. என்ஜினீயரிங் கல்லூரி. 7. சி.என்.பிரதீபா - தேர்வு நடத்துபவர். 8. பிரகதீஸ்வர் - தேர்வு நடத்துபவர், ஏ.சி.தொழில்நுட்ப கல்லூரி. 9. எம்.ரமேஷ்கண்ணன் - தேர்வு நடத்துபவர், சேலம் தொழில்நுட்ப கல்லூரி. 10. எஸ்.ரமேஷ் - தேர்வு நடத்துபவர். இவர்கள் தவிர மேலும் சிலர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.

Comments