ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு 200 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டது அம்பலம்

ஆசிரியர் தகுதித்தேர்வில் 200 பேரின் மதிப்பெண்களை திருத்தி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிக்கூடங்களில் பணி நியமனம் செய்வதற்காக இடைநிலை மற்றும் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வுகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரம் பேர் எழுதினர். அவர்களில் 34 ஆயிரத்து 979 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டில் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்துத் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் போலீசில் புகார் அளித்தது. இதன் காரணமாக ‘ஓ.எம்.ஆர்.’ விடைத்தாள்களை ‘ஸ்கேன்’ செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் வேறு நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட புதிய நிறுவனத்தின் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களது அனைத்து விடைத்தாள்களும் மீண்டும் ஸ்கேன் செய்யப்பட்டன. அப்போது, 200-க்கும் மேற்பட்டவர்கள் போலியான மதிப்பெண்கள் மூலம் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்தது. அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வில் கம்ப்யூட்டர் உள்ளடு செய்து 200 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் மிக அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வரை இதுபோல் தில்லுமுல்லு செய்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இவர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்படுவதற்கு தகுதி பெற்றவர்கள் என்னும் நிலை உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து முறைகேடு மூலம் கூடுதல் மதிப்பெண் பெற்ற 200 பேரும் பிற தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டது. மேலும், முறைகேடு மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்ற 200 பேரிடமும் விசாரணை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 15 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டது, நினைவு கூரத்தக்கது. ஆசிரியர் தகுதித்தேர்வில் நடந்த முறைகேடு குறித்து அறிய சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன் போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் யாரும் போனை எடுக்கவில்லை.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||