ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு விசாரணைக்கு மேலும் 3 மாத கால அவகாசம்?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு படி நிலுவை தொகையை வழங்க வேண்டும்; ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராடி வந்தனர். இந்த நிலையில், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைத்தது. இந்த குழு தன்னுடைய அறிக்கையை ஜூலை கடைசியில் வழங்க அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி குழுவிடம் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பல்வேறு சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் நேற்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 20 சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி வந்த சங்க நிர்வாகிகள் ஒரு நபர் குழுவிடம் மனுக்களை அளித்தனர். விசாரணை இன்னும் முடியாததால் மேலும் 3 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசிடம் ஒரு நபர் குழு கேட்க இருப்பதாக தகவல்கள் கூறகின்றன.

Comments