கிறிஸ்தவராக இருந்து மதம் மாறியவருக்கு இந்து ஆதிதிராவிடர் சலுகையில் ஆசிரியர் பணி வழங்கியது செல்லும் ஐகோர்ட்டு தீர்ப்பு

கிறிஸ்தவராக இருந்து மதம் மாறியவருக்கு இந்து ஆதிதிராவிடருக்கான சலுகையின் கீழ் ஆசிரியர் பணி வழங்கியது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. திருச்சி மாவட்டம் சிக்கத்தம்பூபாளையத்தைச் சேர்ந்தவர் டெய்சி புளோரா. கிறிஸ்தவ ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த இவர், 1999-ம் ஆண்டு இந்து ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்த வானவன் என்பவரை திருமணம் செய்தார். இதற்காக இந்து மதத்திற்கு மாறிய அவர், தனது பெயரை மேகலை என்று மாற்றிக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு இந்து ஆதிதிராவிடருக்கான சாதி சான்றிதழை அதிகாரிகள் வழங்கினர். இந்நிலையில் அவர், 2004-ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறியதால் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பணி வழங்கமுடியாது என்று அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானார். அப்போதும் சாதி சான்றிதழை காரணம்காட்டி அவருக்கு பணி மறுக்கப்பட்டது. இதனால், தன்னை ஆசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மேகலை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐகோர்ட்டு வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, அவர் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்தநிலையில் பிரதான வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரர் பிறப்பில் கிறிஸ்தவராக இருந்தாலும் திருமணத்துக்கு பின்பு இந்து மதத்திற்கு மாறி உள்ளார். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததன் பேரில் அவருக்கு இந்து ஆதிதிராவிடர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்து ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவருக்கான சலுகைகளை பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது. எனவே, மனுதாரருக்கு தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவின் கீழ் ஆசிரியர் பணி வழங்கியது செல்லும்’ என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||