கல்வித்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவு

தகராறில் ஈடுபட்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-1 படித்த மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், 7 மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதில் ஒரு மாணவரின் தாயார், பள்ளி நிர்வாகத்தை அணுகி, ‘தன் மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், பிளஸ்-1 தேர்வு எழுதி முடித்ததும், மாற்றுச்சான்றிதழை பெற்றுக் கொள்வதாகவும்’ கூறினார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகம், அந்த மாணவரை ஆண்டு இறுதி தேர்வு எழுத அனுமதித்தது. ஆனால், அந்த மாணவரை பிளஸ்-2 படிப்பையும் தொடர்ந்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது தந்தை கோரிக்கை விடுத்தார். இதை பள்ளி நிர்வாகம் ஏற்காததால், பள்ளிக்கல்வித்துறையில் மாணவரின் சார்பில் புகார் செய்யப்பட்டது. இதை விசாரித்த பள்ளிக்கல்வித்துறை, அந்த மாணவரை மட்டுமல்லாமல் தகராறில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பின்னர் அவர் பிறப்பித்த உத்தரவில், ‘பள்ளியில் தகராறில் ஈடுபடும் மாணவர்களை அதே பள்ளியில் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டால், அது தவறான முன்உதாரணமாகி விடும். பெரும்பாலான மாணவர்கள் சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமலும், ஈகோ போன்றவற்றினாலும், எதிர்காலத்தை வீணடிக்கின்றனர். இப்போது எல்லாம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ளவர்களும் அவர்களுக்கு நல்ல பண்புகளை கற்றுக் கொடுப்பது இல்லை. எனவே, பிரச்சினையின் தீவிரம் தெரியாமல், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழை பள்ளி நிர்வாகம் ஏற்கனவே வழங்கி விட்டதால், அவர்களை மீண்டும் சேர்க்கத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||