போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி பெற வேண்டுமா?

போட்டிகள் மிகுந்த காலம் இது. ஆயிரம் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டால் பல லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள். படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். ஏராளமானவர்கள் படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத பணியில், குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி நிரந்தர வேலையின்றி தவிக்கும் பலருக்கும் அரசு வேலை என்பது பெருங்கனவாக இருக்கிறது. எப்படியாவது படித்து ஒரு அரசு வேலைக்குப் போய்விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்படும் இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களின் ஆர்வத்திற்கேற்ப, அடுக்கடுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள், ஆசிரியர் பயிற்சி தேர்வுகள், வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள், ரெயில்வே தேர்வுகள், மத்திய அரசு பணிகளுக்கான எஸ்.எஸ்.சி. தேர்வுகள், யூ.பி.எஸ்.சி. தேர்வுகள், ராணுவ பணிகளுக்கான தேர்வுகள், குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் என தேர்வுகள் வரிசை கட்டி நிற்கின்றன. இவற்றில் தங்களுக்கு விருப்பமான பணிக்கு செல்வதற்கான தேர்வை தேர்வு செய்து அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுபவர்கள் உண்டு. இல்லை ஏதாவது ஒரு அரசு பணிக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக பல்வேறு தேர்வுகளையும் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் ஒரே சவால், தேர்வுக்கான தயாரிப்புகளை மேற்கொள்வது மற்றும் பயிற்சியில் பங்கெடுப்பது இவைதான். பலருக்கு அதிக கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சிக்கு செல்ல முடியாது. அவர்கள் சிரமமின்றி பயிற்சி பெறுவதற்கு வசதியாக அரசும் இலவசமாக போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளை வழங்குகிறது என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை. தமிழக அரசு வழங்கும், குடிமைப் பணிகளுக்கான பயிற்சி பற்றி இந்த பகுதியில் ஏற்கனவே பார்த்தோம். குடிமைப் பணிகள் அல்லாத போட்டித் தேர்வுகளான டி.என்.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., ஐ.பி.பீ.எஸ். உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தற்போது இந்த போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 31 சதவீத இடங்களும், பிற்படுத்தப்பட்டோர்-26.5 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்-3.5 சதவீதம், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்-20 சதவீதம், ஆதி திராவிடர்-15 சதவீதம், அருந்ததியர்-3 சதவீதம், பழங்குடியினர்-1 சதவீதம் இடம் அளிக்கப்படுகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி வளாகத்தில் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 3 மாத காலம் பயிற்சி வழங்கப்படுகிறது. அக்டோபர் மாதம் பயிற்சி ஆரம்பமாகிறது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களைcecc.examsonline.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 3-10-2018-ந் தேதியாகும்.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||