மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் சென்னையில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநில மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு அமைப்பின் மாநில தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ச.மயில் கோரிக்கையை விளக்கிப் பேசினார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசினர். திமுகவைச் சேர்ந்த முன்னாள் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, “கடைக்கோடி கிராமங்களில் மிகவும் கடினமான சூழலில் பணி செய்தாலும், தலைசிறந்த மாணவர்களை உருவாக்கும் பணியை மேற்கொள்வோர் இடைநிலை ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களுக்கு ஏன் குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது என்று கேட்கும் மாநாடு இது. ஆசிரியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் கடமை அரசுக்கு உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடக்கப்பள்ளிகளை மூடும் அல்லது இணைக்கும் திட்டம் குறித்து பேசப்படுகிறது. இதை ஒருபோதும் ஆசிரியர்கள் ஏற்க கூடாது” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் கே.சுப்பராயன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் மற்றும் காங்கிரஸ், பாமக, தமாகா நிர்வாகிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் நிறைவில், வரும் நவம்பர் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மறுக்கும் அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்

1 comment:

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||