பி.ஆர்க். படிப்பில் சேர ஆண்டுக்கு 2 முறை நுழைவுத்தேர்வு

கட்டிடக்கலை கல்விக்கான தேசிய திறனறிவுத் தேர்வை (என்.ஏ.டி.ஏ) ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கட்டிடக்கலை வல்லுநர்கள் (ஆர்க்கிடெக்சர்) கவுன்சில் தலைவர் விஜய் கார்க் கூறினார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட கட்டிடக்கலை கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். தேசிய அளவில் சுமார் 20 லட்சம் கட்டிடக்கலை வல்லுநர்கள் தேவைப்படும் நிலையில், சுமார் ஒரு லட்சம் பேர் மட்டுமே இந்திய கட்டிடக்கலை வல்லுநர்கள் கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். கட்டிடக்கலை துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்வதற்கான விழிப்புணர்வு வீடியோ தயாரிக்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு வீடியோவை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம். பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த கட்டிடக்கலை வல்லுநர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகள், அரசு பொதுத் தேர்வுகளால் தேசிய கட்டிடக்கலை கல்விக்கான திறனறிவுத் தேர்வில் (என்.ஏ.டி.ஏ). பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு, இது மிகவும் உதவியாக இருக்கும். ஏப்ரல் மற்றும் ஜூலையில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். 2 தேர்வில் பங்கேற்றாலும்கூட, எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதை கணக்கில் கொள்ளலாம். மேலும், படம் வரைதல் தேர்வுக்கான நேரத்தையும் அதிகரித்துள்ளோம். பி.ஆர்க். படிப்புகளுக்கான கவுன்சலிங்கை தேசிய அளவிலான கவுன்சலிங்காக மாற்ற திட்டமிட்டுள்ளோம். பி.ஆர்க். பயில கணிதம், ஆங்கிலம் மட்டுமே போதுமானதாக இருந்த நிலையில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களைப் படித்திருப்பது அவசியம் என்ற மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம். வரும் கல்வியாண்டு முதல் இந்த முறைகள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||