மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரம் வழங்கப்படும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரம் வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- போனஸ் ஒதுக்கீடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக அரசு ரூ.215 கோடியே 99 லட்சம் ஒதுக்கியுள்ளது. டீசல் விலை ஏற்றத்தால் ஏற்படும் கூடுதல் செலவை ஈடு செய்ய 20.1.2018 முதல் 30.9.2018 வரையிலான காலத்திற்கு ரூ.198 கோடியே 66 லட்சம் மானியமாக அரசு வழங்கியுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களில் டிசம்பர்-2017 முதல் மார்ச்-2018 வரையில் நிலுவையிலுள்ள பணப்பயன்களை வழங்க ரூ.251 கோடியே 2 லட்சம் அரசு வழங்கியுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 1,113 பேருக்கு வருங்கால வைப்பு நிதியும், 1,576 பேருக்கு பணிக்கொடையும், 1,837 பேருக்கு ஈட்டியவிடுப்பு தொகையும், 714 பேருக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையும் வழங்கப்படுவதோடு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின்கீழ் 118 பயனாளிகளும் பயன்பெறுகிறார்கள். மொத்தமாக ரூ.665 கோடி அரசு வழங்கியுள்ளது. இந்த 7 ஆண்டுகளில் அரசால் ரூ.13 ஆயிரம் கோடி போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலவச பயண அட்டை பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், விழா காலங்களில் 22 ஆயிரம் பேருந்துகளை அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தில் இயக்குகிறது. தீபாவளிக்காக முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு முன்பதிவு மையங்கள் தொடங்கப்படும். சென்னையில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் இயக்க ஆவன செய்யப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை அடுத்த வாரத்தில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||