ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முற்றுகை

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பாசிரியர் பணிகளுக்கு 1,325 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு, கடந்த ஆகஸ்டு 13-ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதைத்தொடர்ந்து தற்காலிக இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டது. அதில், அதிக மதிப்பெண் பெற்ற சில தேர்வர்களுக்கு பதிலாக, குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் இடம் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் நேற்று காலை 10 மணியளவில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் தையல், ஓவியம், உடற்கல்வி மற்றும் இசை ஆகிய 4 பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், தேர்வு பட்டியலில் இடம்பெறாத நூற்றுக்கணக்கான தேர்வர் கள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் விளக்கம் இந்த தேர்வு பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு தேர்வு வாரிய அதிகாரிகள், தையல் மற்றும் ஓவியத்தில் உயர்நிலை தொழில்நுட்ப சான்றிதழுக்கு தமிழ்வழி சான்று அளிக்காதவர்களின் பெயர்கள் தேர்வு பட்டியலில் இடம்பெறவில்லை என்று விளக்கம் அளித்தனர். மேலும் உடற்கல்வியில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு மற்றும் பி.பி.இ. என்ற பெயரில் பெறப்பட்ட உடற்கல்வி பட்டப்படிப்பு தகுதி போன்றவை தற்போதைய தேர்வுக்கு ஏற்கப்படாததால் அத்தகையோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்தை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர். தங்களின் கோரிக்கை மனுமீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்ப தேர்வுக்கு தமிழ்வழி சான்றிதழை வழங்க இயலாது என அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது. அப்படியென்றால், டி.டி.சி. முடித்து தமிழ்வழி ஒதுக்கீட்டில் தேர்வுபட்டியலில் இடம் பெற்றவர்கள் யாரிடமிருந்து தமிழ்வழி சான்றிதழை பெற்றனர்? ஒருவேளை தனியார் மையங்கள் அதுபோன்ற சான்றிதழை வழங்கியிருந்தால் விதிமுறைப்படி அது எப்படி செல்லுபடியாகும்? எனவே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, டி.டி.சி. ஆகிய தமிழ்வழி சான்றுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட புதிய தேர்வுபட்டியலை வெளியிட வேண்டும்’ என தெரிவித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தால் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||