பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த 28 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்? பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதி வழங்கி இயக்குனர் சுற்றறிக்கை

பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த 28,167 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன்? என்றும், அந்த மாணவர்களை பிளஸ்-2 தேர்வு எழுத அனுமதி வழங்கியும், அரசு தேர்வுத்துறை இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அரசாணை பள்ளிக்கல்வித்துறை கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், தொடர்ந்து பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்றும், தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு தேர்விலோ அல்லது பிளஸ்-2 இறுதி தேர்வின் போதோ எழுதிக்கொள்ளலாம் என்றும் அறிவித்து இருந்தது. அதன்படி, 2018-ம் ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வும் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் அதில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி நிர்வாகங்கள் மாற்று சான்றிதழை வழங்கி பிளஸ்-2 வகுப்பை அந்த மாணவர்கள் தொடராமல் செய்து இருப்பது தேர்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- 28,167 மாணவர்கள் மார்ச் 2018 பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை அடிப்படையாக கொண்டு, 2019-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து அதில் திருத்தங்கள் இருந்தால் அதன் விவரத்தை முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கு பின்பு, மாற்று சான்றிதழ் (டி.சி.) பெற்று பிளஸ்-2 வகுப்பை பள்ளியில் படிக்காதவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 167 என்பது தெரியவந்து இருக்கிறது. அனுமதி அரசாணையின்படி பிளஸ்-1 தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்களை பிளஸ்-2 வகுப்பில் சேர்க்காமல் மாற்று சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு நீக்கி இருப்பது மாணவர்களின் எண்ணிக்கை மூலம் அறிய முடிகிறது. மேற்குறிப்பிட்ட மாணவர்களின் நலன் கருதி கடந்த மார்ச் 2018-ல் பிளஸ்-1 பொதுத்தேர்வினை பள்ளி மாணவராக எழுதியபின், பள்ளியில் தொடர்ந்து பிளஸ்-2 பயிலாமல் மாற்று சான்றிதழ் பெற்று பள்ளி இடைநின்ற மாணவராக இருப்பினும், அவர்கள் ஏற்கனவே பிளஸ்-1 பயின்ற பள்ளியின் மாணவராகவே கருதப்படுவார்கள். அந்த பள்ளியின் மாணவர்கள் பெயர் பட்டியலில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, முதன் முறையாக மார்ச் 2019 பிளஸ்-2 தேர்வை எழுதுவதற்கும், பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை மார்ச் 2019-ல் எழுதுவதற்கும், செய்முறை தேர்வுகளையும் அதே பள்ளியில் எழுதுவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. 5-ந் தேதிக்குள்... இந்த தகவலை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வருகிற 5-ந் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே தெரிவிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தினையே இந்த மாணவர்களிடம் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||