நான்காவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்நாள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களை போலீஸார் வேனில் ஏற்றி எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் தங்க வைத்தனர். இதையடுத்து விடிய விடிய அங்கு சாப்பிடாமல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீண்டும் டி.பி.ஐ. வளாகத்துக்குச் சென்று உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட வரும் ஆசிரியர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமுமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை 4-ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை இரவு வரை 169 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலனோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று போராட்டக் களத்துக்குத் திரும்பியுள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிபிஐ வளாகத்தில் உள்ள குடிநீர் வசதி, கழிவறைகள், உறங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆசிரியர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் டிபிஐ வளாகத்திலிருந்து வெளியேறுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருகின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||