அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு இன்றே திரும்புங்கள் என்றும், அனைவரும் ஒன்றுபட்டு மக்கள் பணியை தொய்வின்றி மேற்கொள்வோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது குறித்து தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 7-வது ஊதியக்குழு... மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை என்றும் மறுத்ததில்லை. அவர், அரசு ஊழியர்கள் கேட்காமல் கூட பல கோரிக்கைகளை ஊழியர்களின் நலன் கருதி நிறைவேற்றியுள்ளார். அவர் வழியில் வந்த இந்த அரசும், மக்களின் நலனை காக்கும் அதே வேலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை என்றுமே புறந்தள்ளியது இல்லை. அதனால் தான் மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவின் பரிந்தரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக, தமிழ்நாட்டிலும் ஊதியக்குழுவை அமைத்து, அதன் பரிந்துரையை உரிய காலத்திலேயே பெற்று, ஒரே மாதத்தில் அதனை பரிசீலித்து, மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் வழங்கி ஆணையிட்டது. இதனால் ஆண்டுக்கு 14,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும், அரசு ஊழியர்களின் நலன் கருதி, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், தமிழக அரசு ஊதிய உயர்வை அமல்படுத்தி உள்ளது. நிலுவைத்தொகையுடன் வழங்குகிறது பல மாநிலங்களில் ஊதிய உயர்வும், அகவிலைப்படியும் முறையாக வழங்காமலும், சம்பளம் கூட சில மாநிலங்களில் உரிய காலத்தில் வழங்கப்படாத நிலையிலும், இந்த அரசு அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு அறிவித்த உடன், நிலுவைத்தொகையுடன் வழங்கி வருகிறது. மாநில அரசு மக்களின் நலனுக்காக செயல்படவேண்டும். இதில் என்னோடு, அரசு ஊழியர்களாகிய உங்களுக்கும் முழு பங்கு உண்டு. நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால்தான், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, லட்சக் கணக்கான வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, தமிழக மக்களின் வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தி, தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும். இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கி அதை முறையாக பயன்படுத்துவதும் நம் அனைவரின் கடமையாகும். வறட்சியின் பிடியில் தமிழகம் இத்தகைய சூழ்நிலையில் நம் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, தியாக உணர்வோடு, நம் உரிமைகளையும் சில நேரங்களில் விட்டுக்கொடுத்து, மக்கள் பணியாற்றுவது நம் கடமை என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு தற்போது கடுமையான வறட்சியின் பிடியில் உள்ளது. பல மாவட்டங்களில் பருவ மழை பொய்த்து கடுமையான குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. குடிநீருக்காக மக்கள் தினந்தோறும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சென்ற நவம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை. குடிசைகளை இழந்த மக்களுக்கு, வீடுகளை கட்டித்தர வேண்டும். விவசாயத்தை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு அதே வேளையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களோடு போட்டிப்போட்டு தொழில் முதலீடுகளை நாம் பெற்றால்தான், நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இவற்றை எல்லாம் செய்ய வேண்டும் என்றால், நாம் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு கடும் பணியாற்ற வேண்டும். இத்தகைய பொறுப்புகள் பெருஞ்சுமையாக இருக்கும்போது, உரிமைகளை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பது, நாம் மேற்கொண்டிருக்கும் மக்கள் பணிகளுக்கு பொருத்தமாக அமையாது. எனவே, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு, மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மாநிலம் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, மக்களின் நலன் பேணும் திட்டங்களையும், வளர்ச்சித்திட்டங்களையும் ஈடுபாட்டோடும், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்த வேண்டும். எனவே அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நான் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம், போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள். பணிக்கு திரும்புங்கள். மக்கள் பணியை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்வோம். இதை எனது அன்பான வேண்டுகோளாக கருதி, நாளையே (இன்று) அனைவரும் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||