தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் கிடையாது

கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று பணிக்கு திரும்பி இருப்பதாகவும், வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்ற ஆசிரியர்களில் 1,273 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐகோர்ட்டு மதுரை கிளை கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடுவதா? என்று கண்டனம் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தது. ஐகோர்ட்டு வழக்கை ஒத்திவைத்த நிலையிலும், ஆசிரியர்கள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களில் பெரும்பாலானோர் நேற்று பணிக்கு திரும்பியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் கூறும்போது, ‘பள்ளிக்கல்வியை பொறுத்தவரையில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 758 பேரில், 6 ஆயிரத்து 767 பேர் மட்டுமே பணிக்கு வரவில்லை. இது 97 சதவீதம் வருகையை காட்டுகிறது’ என்றார். இதேபோல், தொடக்கக்கல்வியை பொறுத்தவரையில் 80 முதல் 85 சதவீதம் வரை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக அதன் இயக்குனர் கருப்பசாமி தெரிவித்தார். ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி இருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எதுவும் இருக்காது. ஆனால் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கான சம்பளம் கிடையாது. இந்த சம்பளம் பிடித்தம் இம்மாத கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணிக்கு திரும்பிய ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமாக போராட்டத்தில் இனி ஈடுபடமாட்டோம் என எழுதி வாங்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||