போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன், முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் ஐகோர்ட்டில் அரசு திட்டவட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்று சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் கூறினார். மாணவர்களின் நலன் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘பொதுத்தேர்வு நெருங்குவதால், மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா?’ என்று கேள்வி கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி ஆசிரியர்கள் சங்கங்களின் வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். போராட்டத்தை கைவிட தயார் இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆசிரியர்கள் சார்பில் வக்கீல் ஜி.சங்கரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத், ‘அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு தெரிவித்து விட்டனர். கடந்த ஆண்டு போராட்டம் நடத்த முற்பட்டபோது, ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்தது. அப்போது எங்களது கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை தமிழக முதல்-அமைச்சர் எங்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்து குறைகளை கேட்கவேண்டும். அவர் பேச்சுவார்த்தை நடத்தினால், போராட்டத்தை கைவிட தயார்’ என்றார். பங்களிப்பு ஓய்வூதியம் வக்கீல் ஜி.சங்கரன் தன் வாதத்தில், ‘ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டம் நீண்டகால போராட்டம் ஆகும். அவர்கள் நியாயமான கோரிக்கையுடன் தான் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில், ரூ.25 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு செலுத்தாமல் தமிழக அரசு உள்ளது. இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்து அரசு வைத்துக் கொண்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசின் பங்கை இதுவரை செலுத்தவில்லை. 7-வது ஊதிய உயர்வுக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு மாணவர்களின் எதிர்காலம் மீது அக்கறை உள்ளது. அதேநேரம் அவர்களது கோரிக்கையை முதல்-அமைச்சர் கேட்டு, பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்’ என்றார். பேச்சுவார்த்தை கிடையாது மேலும், ‘ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு தொடர்ந்து பரிசீலிக்கவில்லை என்பதால்தான் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். ஆனால், ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தும், பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு விருப்பத்துக்கேற்ப இடமாற்றமும் வழங்கியும் போராட்டத்தை நீர்த்துப்போக முயற்சிக்கிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்போது தவறான புள்ளி விவரங்களை தெரிவித்து, போராட்டக்காரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது’ என்று அவர் கூறினார். இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘பல மாதங்களாக இவர்களுடன் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டனர். புதிதாக பேசுவதற்கு எதுவும் இல்லை. அதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். திரும்பிவிட்டனர் மேலும் அவர், ‘அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை பிடித்தம் போக இரண்டாம் நிலை ஆசிரியர்கள் பணிக்கு சேரும்போது ரூ.18 ஆயிரமும், ஓய்வு பெறும் நேரத்தில் ரூ.56 ஆயிரமும் பெறுகின்றனர். அதுவே உயர்நிலை, மேல்நிலை ஆசிரியர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். தலைமை ஆசிரியர்களில் என்றால் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். தற்போதைய நிலவரப்படி 85 முதல் 90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். எஞ்சியவர்களும் உடனடியாக பணிக்கு திரும்பிவிடுவர். இதுவரை 3 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர். இதில் இருந்து வேலை கிடைக்காத ஆசிரியர்களின் நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். தற்போதுள்ள கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு மதுரை கிளையில் நிலுவையில் உள்ளதால், தற்சமயம் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது இயலாத காரியம்’ என்று கூறினார். அரசுக்கு மிரட்டல் அதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு சமூக தீர்வு காணவேண்டும் என்பதுதான் இந்த ஐகோர்ட்டின் எண்ணம். தற்போது, மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இது மிகவும் மகிழ்ச்சியான விசயம். இருதரப்பும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதேநேரம் ஆசிரியர்கள் போராடத் தொடங்கியதும், நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட மற்ற அரசு ஊழியர்களும் சேர்ந்து போராட்டம் நடத்துவது என்பது அரசை மிரட்டி பணியவைப்பது போல் உள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன்தான் முக்கியம். அதனால் தான் இந்த விசயத்தில் நீதிமன்றமும் தலையிடுகிறது’ என்று கருத்து கூறினார். பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.

1 comment:

 1. Whatever it maybe the Strike of the TEACHERS is meaningless because:

  1) The Teachers Say We are against for CPS. But it should be noted that, when at the time of joining as a teacher, they have agreed for CPS, Now why they are agitating.

  2) It may be noted that, when a teacher retired from service, immediately they are starting a school. Paying lesser salary to their school teachers, and makes money, whereas now they are asking more and more benefits from the government like 7th pay commission arrears. is it correct?

  3) Government teacher are generally not sending their children to government school, the reason given by the teachers during agitation is,
  Schools are not neat!!!!!!!
  Schools are not clean !!!!!
  Government school environment is not clean!!!!!!
  My question if their house is not clean, is they vacate the house? or quit the house?
  If their environment is not clean are they not adjusting with the environment?

  It seems tobe they are telling false information to pubic.
  They must conclude their strike and let them continue with a good government mechanism.  ReplyDelete

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||