பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் பணியிடம் காலியிடமாக அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் அதிரடி நடவடிக்கை.

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் பணியிடம் காலியிடமாக அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் அதிரடி நடவடிக்கை. பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் கடந்த 22-ந்தேதி முதல் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் 29-ந் தேதி(நேற்று) காலை 9 மணிக்கு பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் அதிக அளவிலான ஆசிரியர்கள் அரசின் கோரிக்கையை ஏற்று பணியில் சேர்ந்துள்ளார்கள். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பணியில் சேராத ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ)-ன் கீழ் குற்ற குறிப்பாணை வழங்கப்பட வேண்டும். மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நியமன அலுவலரால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்க வேண்டும். 29-ந்தேதி (நேற்று) இரவு 7 மணிக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக கணக்கிடப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு பட்டியல் அனுப்பப்பட வேண்டும். 30-ந்தேதி(இன்று) முதல் பணியில் சேர வரும் ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலர்களின் முன் அனுமதி பெற்ற பின்னரே பணியில் சேர அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கும்போது அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளியில் சேர அனுமதி கோரினால் பொதுமக்களின் எதிர்ப்புகளை தவிர்க்கும் பொருட்டும், ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதியும் முதன்மை கல்வி அலுவலரால் பணியாணை வழங்கப்படும் இடத்தில் பணியில் சேர அறிவுறுத்தி, அதன் விவரத்தை பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||