விடைத்தாள் திருத்தியதில் குளறுபடி: 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு சரியான விளக்கம் அளிக்காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விடைத்தாள் திருத்தியதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு இருக்கிறது. சரியான விளக்கம் அளிக்காத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் 19-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் 29-ந்தேதியும் வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தேர்வுகளுக்கான விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி, மாணவ-மாணவிகள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தியதில் குளறுபடி இருந்ததை அரசு தேர்வுத்துறை கண்டுபிடித்து இருக்கிறது. சில மாணவர்களுக்கு பெரிய அளவில் விடைத்தாள் குளறுபடி ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


இந்தநிலையில் அரசு தேர்வுத்துறை தவறு செய்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கல்வி துறைக்கு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வி துறை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருக்கிறது.

நோட்டீசு பெறப்பட்ட ஆசிரியர்கள் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதனை முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கின்றனர். ஆசிரியர்கள் திருத்தியதில் ஏற்பட்ட தவறுகளை பொறுத்து, ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் வெவ்வேறு விதமாக விளக்கத்தை அளிக்க பள்ளிக்கல்வி துறை அந்த நோட்டீசில் கேட்டு இருக்கிறது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவியிடம் கேட்டபோது, ‘ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்புவதில் எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வி துறைக்கு தெரிவித்துவிட்டோம். அவர்கள் தான் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.

பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ‘அரசு தேர்வு துறை அளித்த பட்டியலின்படி 300 ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்பி இருக்கிறோம். சரியான விளக்கத்தை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காதவர்கள் மீதும், சரியான விளக்கத்தை தெரிவிக்காத ஆசிரியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை (17ஏ, 17பி) மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைகளை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர்களே எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பணி இடைநீக்கம் என்ற அளவுக்கு நடவடிக்கை இருக்காது’ என்றார்.No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||