கடைநிலை ஊழியர்களையும் எழுத்து தேர்வு மூலம்தான் நியமிக்க வேண்டும் தலைமை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கடைநிலை ஊழியர்களையும் எழுத்து தேர்வு மூலம்தான் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தேனியை சேர்ந்த உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் மாற்றுத்திறனாளி. 1998-ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு அதே ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக வேலைக்காக காத்திருந்தேன். 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதியன்று காமயக்கவுண்டன்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக இரவு காவலர் பணிக்கு நேர்முகத்தேர்வு நடந்தது. சேகர் என்பவர் அந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அங்குள்ள ஒரு அதிகாரியின் நெருங்கிய உறவினர்தான் சேகர். இதனால் தான் அவருக்கு இரவு காவலர் பணி வழங்கப்பட்டது. முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே இரவு காவலராக சேகரை நியமித்ததை ரத்து செய்துவிட்டு, என்னை அந்த பணியில் நியமித்து, 2011-ம் ஆண்டு முதல் உரிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சேகர் என்பவரின் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். சேகர் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். அவரது நியமனத்தை ரத்து செய்ய முடியாது. இருந்தபோதும் இதுபோன்ற பணி நியமனங்கள் எந்த விதமான விதிகளையும் பின்பற்றி நடக்கவில்லை என்பது தெரியவருகிறது. உரிய விதிமுறைகள் இல்லாததால் பதவியில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களை காலிப்பணியிடங்களில் நியமிக்க வாய்ப்பு உள்ளன. குறிப்பாக, கடைநிலை ஊழியர் பணியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை அதிகாரிகள் நியமித்துக் கொள்கிறார்கள். இந்த நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும். மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு தமிழகத்தை பொறுத்தவரை நேர்முகத்தேர்வு அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த பணி நியமனங்கள் அனைத்தும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பரிந்துரை அடிப்படையில் தான் நடைபெறுகின்றன. இதனால் ஒட்டுமொத்த பொதுநிர்வாகத்திலும் அடிப்படை பணியாளர் தேர்வு நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறாது. இதுபோல நியமிக்கப்படும் ஊழியர்களிடம் இருந்து நேர்மையையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? திறனற்ற நிர்வாகம் என்பது நாட்டின் முன்னேற்றத்தில் கரும்புள்ளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே துப்புரவு பணியாளர், தோட்ட பணியாளர், கிராம உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையலர், அலுவலக உதவியாளர் போன்ற கடை நிலை பணிகளுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் பிறப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் வழிகளில் நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பித்து, அதுகுறித்த அறிக்கையை அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a comment

||| www.new.kalvisolai.com ||| www.studymaterial.kalvisolai.com ||| www.tamilgk.kalvisolai.com ||| www.onlinetest.kalvisolai.com |||