பள்ளி நேரங்களில் தலைமை ஆசிரியர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவேண்டும் பள்ளி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

பள்ளி கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்கள் மற்றும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி விவரங்கள் இ.எம்.ஐ.எஸ். (கல்வியியல் மேலாண்மை தகவல் மையம்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே இத்தகைய விவரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இ.எம்.ஐ.எஸ். இணையதளத்தின் மூலம் பெற்று அனுப்பவேண்டும். இதனால் பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை பெறுவதற்காக தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டத்தை நடத்தவேண்டிய அவசியம் இருக்காது. சூழ்நிலை ஏற்பட்டால் சனிக்கிழமை அல்லது மாலை நேரங்களில் ஆய்வு கூட்டத்தை நடத்தலாம். தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி வேலை நேரங்களில் விவரங்களை அளிக்கவும், பெறவும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் செல்வதை தவிர்க்கவேண்டும். விவரங்களை மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாக அனுப்பலாம். இவ்வாறு செய்தால் கல்வி பணிகள் பாதிக்காது. எனவே பள்ளி நேரங்களில் விவரங்களை அளிப்பதற்காக வெளியே செல்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிர்க்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Comments