சிவில் நீதிபதி பதவிக்கு விண்ணப்பிக்க 29-ந்தேதி வரை அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு

சிவில் நீதிபதி பதவிக்கு வருகிற 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க வசதியாக இணையதளத்தை திறந்து வைக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிவில் நீதிபதி தேர்வு

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் லட்சுமி, சண்முகப்பிரியா, பத்மாவதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சிவில் நீதிபதி பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக போட்டித்தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த செப்டம்பர் 9-ந்தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு அக்டோபர் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி முதல்நிலைத்தேர்வு வருகிற நவம்பர் 24-ந்தேதியன்றும், பிரதான தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 28 மற்றும் 29-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு 9.9.2016 முதல் 9.9.2019 வரை சட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளும், 3 ஆண்டு தொழில் அனுபவம் உள்ள வக்கீல்களும் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி.யின் இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க முடிந்தது.

அனுமதி

இதனால் 2016-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த அதாவது 9.9.2016-க்கு முன்பாக படிப்பை நிறைவு செய்த எங்களால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இது 2016-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கிடையே பாகுபாடு பார்ப்பது போல் உள்ளது. எனவே 2016-ம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த எங்களையும் இத்தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தீர்ப்புக்கு கட்டுப்பட்டது

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

பின்னர் நீதிபதிகள், “மனுதாரர்கள் மட்டுமின்றி 2016-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகள் அனைவரும் இந்த சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் நேற்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 29-ந்தேதி வரை அனுமதிக்க வேண்டும். இதற்காக தனது இணையதளத்தை டி.என்.பி.எஸ்.சி, நிர்வாகம் திறந்து வைக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்பவர்கள், வருகிற 31-ந் தேதிக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஏற்கனவே இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுடன் சேர்த்து இவர்களுக்கும் அனுமதி சீட்டு போன்றவற்றை அனுப்பி தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். ஆனால் இந்த இடைக்கால உத்தரவு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது” என உத்தரவிட்டனர்.


Comments